வியாழன், 26 பிப்ரவரி, 2009
அதிகாலை 3.15 மணி, நிறுவனத்திற்கு நான் வேலைக்குவரும் நேரம், நான் வேலைக்குவரும் போது நிறுவனத்தில் யாரும் இல்லை. நான் மாத்திரமே! ஏனையோர் வேளைக்கு வருவது அதிகாலை 5 மணியளவில்.
நான் நிறுவனத்தினுள்ளே வந்ததும் முதலில் யாரும் இரவு நிறுவனத்தில் தங்கியிருக்கிறார்களா என பார்ப்பது வழக்கம்.
அன்றும் அதேபோன்று பார்த்தேன்! யாரும் இல்லை!
வேலைக்கு வந்த நான் கணனியில் அமர்ந்து எனது வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.
சரியாக அதிகாலை 3.30 மணி, எனது அருகாமையிலுள்ள அறையில் யாரோ ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
உடனே எழுந்து சென்று பார்த்தேன்! யாரும் இல்லை.
சரி அது எனது நினைவாக இருக்கும் என நினைத்து கொண்டு மீண்டும் எனது இடத்திற்கு சென்று எனது வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.
மீண்டும் அதே பெண்ணின் குரல். ஆனால் அப்போது ஒரு சிறிய மாற்றம், அந்த பெண்ணுடன் இன்னுமொருவர் உரையாடுவது போல எனது காதுகளுக்கு கேட்டது.
மீண்டும் எழுந்து சென்று பார்த்தேன்! அப்போதும் யாரும் இல்லை!
அந்த நேரம் தான் மனதில் தோன்றியது. நினைவல்ல நிஜம் என்று!
அப்போது எனக்கு தெரியும் நிச்சயம் எனக்கு ஒருவர் தனது விளையாட்டை ஆரம்பிக்கிறார் என்று. சென்றேன் மீண்டும் எனது இடத்திற்கு.
சென்ற நான் எனது அருகிலிருந்து வானொலி பெட்டியின் சத்தத்தை சற்று அதிகரித்து வைத்தேன். எனது வேளைகளை நான் செய்து கொண்டிருந்தேன்!
மீண்டும் அதே குரல். நான் அதை பொருட்படுத்தவில்லை. எனது வேலைகளை செய்து கொண்டிருந்தேன்! அந்த குரலின் சத்தம் நேரம் செல்ல செல்ல அதிகரித்து கொண்டே செல்கிறது.
சுமார் 15 நிமிடங்கள் இருந்த குரலை கேட்ட நான்! மீண்டும் அந்த அறையின் வாசலுக்கு சென்றேன்! அறையின் உள்ளே செல்லவில்லை!
நான் அந்த இடத்திற்கு சென்றதும் சத்தம் இல்லை! சுமார் 5 நிமிடங்கள் மட்டும் இருந்த இடத்திலிருந்தே பார்த்து கொண்டிருந்தேன்! யாரும் இல்லை!
மீண்டும் நான் எனது இடத்திற்கு சென்று எனது வேலைகளை ஆரம்பித்தேன்! தீடீரென வித்தியாசமான சத்தம்!
உடனே அந்த அறையின் பக்கம் திரும்பி பார்த்தேன்! அந்த அறைக்கு வெளியில் ஒரு கணனி உள்ளது. அதற்கு பின்னால் ஒரு யன்னல் துணி உள்ளது.
அந்த துணி காற்றுக்கு வீசுப்படுவது போல வீசு பட்டு, மேலே சென்று நின்று கொண்டது. யாரோ அந்த துணியை பிடித்து வைத்துள்ளது போல, அப்படி நிற்கின்றது.
உடனே எனது இடத்திலிருந்து எழுந்து அந்த துணியை பாய்ந்து என் பக்கம் இழுத்தேன்! நான் துணியை இழுத்ததன் பின்னர் ஒரு சத்தம் என் பின்னால் சென்றது.
என் பின்னால் சென்ற சத்தத்தை உணர்ந்த நான்! பின்னால் திரும்பி பார்க்க வில்லை! எனக்கு தெரியும் நான் பின்னால் திரும்பினால் எனக்கு எதாவது நிச்சயம் நடக்கும் என!
அப்படியே சில நிமிடங்கள் இருந்த இடத்திலேயே நின்று, அப்படியே என் இடத்திற்கு வந்து அமர்ந்து கொண்டேன், அன்று அந்த சத்தம் அப்படியே அமர்ந்து விட்டது.
அந்த பின்னர் நான் எனது வேலைகள் செய்து முடித்து விட்டு. அருகிலுள்ள வீடுகளில் இது என்னவென விசாரித்த போது!
சில வருடங்களுக்கு முன்னர் எமது நிறுவனத்திற்கு அருகிலுள்ள இருவர் காதலித்துள்ளதாகவும், அவர்களின் காதலை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாததினால், அந்த யுவதி தன்னை தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாகவும், அதன் பின்னர் காதலனும் இறந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அப்போதே நான் புரிந்து கொண்டேன்! முதலில் எனக்கு கேட்ட குரல் தீயிட்டுக் கொண்ட பெண்ணினுடையதும், அவள் பேசி கொண்டிருந்தது அவளுடைய காதலனிடமும் என!
அதன் பின்னர் இதுவரை எனக்கு அந்த சத்தம் மீண்டும் கேட்கவில்லை!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)